சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் சங்கத் தலைவர் வி. அன்பழகன்
வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு சட்ட மன்றத் தலைவர் இப்படி நடந்துக்
கொள்வது முறைதானா என கேள்வி எழுப்பியுள்ளார். விஜயகாந்தின் செயல்பாடுகள்
பத்திரிகை சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவால் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது பத்திரிகை சுதந்திரத்தின் குரல் வளையை நெரிப்பது போன்று உள்ளது என்றும்
பத்திரிகையாளர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒர்க்கிங் ஜர்னலிஸ்ட் யூனியன் ஆப் தமிழ்நாடு சங்கத்தின் தலைவர்
ஏ.ஜெ.சகாயராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சகிப்புத் தன்மை இல்லாதவர்கள்
பொது வாழ்க்கையில் ஈடுபடக்கூடாது என கூறியுள்ளார். தமது அநாகரிக
செயலுக்காக விஜயகாந்த் இன்றே மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்,
இல்லையெனில், பத்திரிகையாளர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி போராட்டம்
நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
-தேனி முருகேஷ்