தமிழகத்தில் டெங்கி காய்ச்சலுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள
நிலையில், மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் காய்ச்சலுக்கு 30 பேர்
பலியாகியுள்ளனர்.
குறிப்பாக மேலூர் பகுதியில் மட்டும் 28 பேர் காய்ச்சலால் இறந்துள்ளனர்.
நேற்று இரவு ஒரு சிறுமி உயிரிழந்துள்ளார். குழந்தைகள் மற்றும் வயதானவர்களே
அதிகளவு காய்ச்சலால் பாதிக்கப்படுள்ளதாக கூறப்படுகிறது. மேலூரை சேர்ந்த
வல்லாலப்பட்டி, பழைய சுக்காம்பட்டி, கொட்டகுடி உள்ளிட்ட பகுதிகளில்
காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக காணப்படுவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பெய்த மழைநீர் ஆங்காங்கே தேங்கிக்கிடப்பதாகவும்,
கொசுக்களின் பெருக்கம் இதன் காரணமாகவே அதிகரித்திருப்பதாகவும் அப்பகுதி
மக்கள் தெரிவிக்கின்றனர். முன்னதாக இது குறித்து வந்த புகாரின் பேரில்
சுகாதார துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் பார்வையிட்டு தேங்கியிருந்த தண்ணீரை
வெளியேற்றியுள்ளனர். எனினும் சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால்
மீண்டும் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து, தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-தேனி முருகேஸ்