தமிழகத்தில் மின்சாரத்தை அனைத்து பகுதிகளுக்கும் சரிசமமாக பகிர்ந்தளிக்கக் கோரி, தமிழக தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் இன்று கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
மாநில அரசே கையாளும் இந்த முரண்பட்ட நிலை தொடர்ந்தால், தமிழகம் மிகப் பெரிய சிக்கலை சந்திக்கும் என கூறப்படுகிறது.
மின் வினியோகத்தி்ல் பாகுபாடு-கிளம்பும் சிக்கல் : தமிழகத்தில்
உற்பத்தியாகும் மின்சாரம் 7 ஆயிரத்து 500 மெகாவாட். ஆனால் இதில் 3 ஆயிரம்
மெகாவாட்டை சென்னைக்கும், அதன் சுற்றுப்புறங்களுக்கு மட்டுமே வாரி
வழங்கிவிட்டால், நாங்கள் எப்படி தொழில் செய்வது என அதிருப்தி
தெரிவிக்கின்றனர் மற்ற மாவட்ட தொழிலதிபர்கள். மதுரையில் நடந்த தமிழக தொழில்
வர்த்தக சபை, மற்றும் மதுரை மாவட்ட சிறு குறு தொழில்கள் சங்கம் உள்ளிட்ட
பல தொழில் அமைப்புகளின் கூட்டத்தில்தான் இத்தகையை குமுறல்கள் வெளிப்பட்டது.
தொடர் மின்வெட்டு காரணமாக, தொழிற்சாலைகளில் 3 ஷிஃப்டுகளில் நடந்த வேலை 2
ஷிஃப்ட், ஒரு ஷிஃப்ட் என குறைந்து இப்போது அதுவும் இல்லாத நிலைக்கு சென்று
கொண்டிருப்பதாக தொழில் துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
சென்னைக்கு மட்டும் 3,000 மெகாவாட்டா?: சென்னையில் 2
மணி நேரம் மட்டுமே மின்வெட்டும், மற்ற மாவட்டங்களில் 14 முதல் 16 மணி நேர
மின்வெட்டும் நிலவுவது புதிய பிரச்னைகளுக்கும் காரணமாகிறது என தொழில்
துறையினர் அதிருப்தி தெரிவிக்கின்றனர். புதிய தொழில்கள் சென்னை மற்றும்
அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே குவியும் அபாயம் எழுந்துள்ளது
என்கின்றார்கள் அவர்கள்.
சென்னையில் மாநில அரசு தரும் மின்சாரத்தில் உற்பத்தியாகும் பொருட்கள்,
மற்ற மாவட்டங்களில் யூனிட்டுக்கு 16 ரூபாய் செலவாகும் ஜெனரேட்டர்
மின்சாரத்தில் உற்பத்தியாகின்றன என்றும் இவர்கள் கூறுகின்றனர்.
இதனால் சென்னை நிறுவனங்களுடன் தங்களால் போட்டியிட முடியாத நிலை
இருப்பதாகவும் மற்ற மாவட்ட தொழில்துறையினர் கூறுகின்றனர். இந்த சூழலில்,
உற்பத்தியாகும் மின்சாரத்தை அனைத்து பகுதியினருக்கும் சரிசமமாக பகிர்ந்து
வழங்காவிட்டால் ஆயிரக்கணக்கான சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அழியும்
நிலை ஏற்படும் என்று மதுரை மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
சம மின் வினியோகம் கோரி கதவடைப்பு: சரிசமமாக மின்சாரம்
வழங்க வலியுறுத்தி ஏற்கனவே தாங்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில்
வழக்கு தொடர்ந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தங்களது
இக்கோரிக்கையை அரசுக்கு கொண்டு செல்லும் விதத்திலேயே இந்த ஒரு நாள்
கதவடைப்பு நடத்த உள்ளதாகவும் தொழில் வணிக அமைப்புகள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் தொடரும் இந்த தொடர் மின்வெட்டால், பொதுமக்களும்,
தொழில்துறையினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதனை தீர்க்க
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மின்வெட்டுக்கு காரணம் என்ன? தமிழகத்தின் மின்தேவை
சுமார் 12 ஆயிரம் மெகாவாட். ஆனால், 7 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம்
மட்டுமே உற்பத்தியாவதால், 4 ஆயிரம் மெகாவாட் வரை பற்றாக்குறை நிலவுகிறது.
இந்த நிலையில் ஆண்டுக்கு 7 முதல் 8 சதவிகிதம் வரை மின்சார தேவை
அதிகரிக்கிறது.
மின் உற்பத்தி குறைந்தது ஏன்? தமிழ்கத்தில் நீண்ட
காலத்திற்கு முன்பு துவங்கப்பட்ட பல மின் திட்டங்கள் இன்னும்
செயல்பாட்டுக்கு வரவில்லை.அதேபோன்று, சுமார் 2 ஆயிரத்து 200 மெகாவாட்
உற்பத்தி செய்யும் அளவிற்கு புனல் மின் நிலையங்கள் இருந்தபோதிலும், பருவமழை
பொய்த்துப் போனதால், அவற்றில் 600 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி
செய்யப்படுகிறது.
மின்சாரம் கொண்டு வருவதில் சிக்கல்: வடமாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வருவதில் மின் வழித்தட பிரச்னை இருப்பதால், அதிலும் சிக்கல் நிலவுகிறது
-தேனி முருகேஸ்வரன்.