"மதுரை மாவட்டம் மேலூர் அருகே வறுமையான சூழலில் குடும்பம் இருந்தாலும் வாழ்க்கையை வெறுமையாக்க விரும்பாமல் விடாமுயற்சியுடன் படித்து 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1000க்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் மாணவிகள் இருவர். ஆனால், மேல்படிப்பை தொடரமுடியுமா என்ற கலக்கத்தில் இருந்னர் அந்த மாணவிகள்."
இப்படி ஒரு செய்தி 17.05.2013 காலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதே நேரத்தில் புதிய தலைமுறை சார்பில் கல்விக் கடலின் கலங்கரை விளக்கம் கல்விக் கண்காட்சி சேலத்தில் தொடங்கியது.
உதவிக்கரம் வேண்டி காத்திருந்த மாணவிகளுக்கு புதிய தலைமுறை கலங்கரை விளக்கம் கல்விக் கண்காட்சியில் வழி கிடைத்தது, ஒளி பிறந்தது....
நரசுஸ் சாரதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி இவர்களுக்கு உதவிரக்கரம் நீட்டியுள்ளது.
இந்நிறுவனத்தின் துணை வேந்தர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில்: பிளஸ் 2 தேர்வில் 1200க்கு 1139 மதிப்பெண்கள் பெற்றும், மேற்படிப்பை தொடர முடியாமல் தவித்து வரும் மதுரை மாணவி தைரியலட்சுமி, கவுன்சிலிங்குக்கு வருவதற்கு கூட காசு இல்லாமல் தவிப்பதை புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வாயிலாக தெரிந்து கொண்டேன். அந்த மாணவிக்கு தங்கும் விடுதி கட்டணத்தைத் தவிர கல்விக்கான முழுக் கட்டணத்தையும் எங்கள் நிறுவனேமே ஏற்றுக் கொள்ளும் என்றார்.
அதே போல் கொட்டாம்பட்டியைச் சேர்ந்த மாணவி அபிராமி 1030 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அந்த மாணவி, பெற்றோர்களுடன் வந்து தன்னை சந்திக்குமாறு தெரிவித்தார். அவரும் மேல்படிப்பைத் தொடர உதவி செய்வதாக உறுதியளித்துள்ளார்.
வெற்றி லட்சுமியான தைரிய லட்சுமி: மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகிலுள்ள எம்.வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியின் மகள் தைரியலட்சுமி.
அன்றாட உணவிற்கே அல்லல் படவேண்டிய நிலையில் குடும்பம் இருந்தாலும், விடாமுயற்சியுடன் படித்த தைரியலட்சுமி பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் 1131.
தைரிய லட்சுமயின் உயரிய லட்சியம்: தைரியலட்சுமி கூறுகையில் சிறு வயதில் இருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பது தான் தனது லட்சியம் என்றும், ஆனால் குடும்பச் சூழல் காரணமாக தன்னால் இப்போது கவுன்சிலிங்குக்கு கூட செல்ல முடியுமா என்று தெரியவில்லை என்று வேதனை தெரிவித்திருந்தார்.
தைரியலட்சுமியின் தாய் கூறுகையில்: நான் படிப்பறிவு இல்லாதவள். என் மகளை கஷ்டப்பட்டு நன்கு படிக்க வைத்திருக்கிறோம். மேலும் படிக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்றார்.
அரசுப் பள்ளியில் படித்து சாதித்த அபிராமி: மற்றொரு மாணவி கொட்டாம்பட்டியை சேர்ந்த அபிராமி. அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த இவர் 1039 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது தந்தை இறந்து பல ஆண்டுகள் ஆகிய நிலையில், தாய் கூலி வேலை செய்து பள்ளி கல்வியை அளித்துள்ளார். பள்ளியில் முதல் மாணவியாக வந்திருந்தாலும், பொறியியல் படிக்க வேண்டும் என்ற தனது கனவு நனவாகுமா என்ற ஏக்கத்திலுள்ளார் அபிராமி.
கனவு நனவானது குடும்பம் வறுமையில் உழன்றாலும், பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பாடுபட்ட பெற்றோரின் உழைப்பும், லட்சியத்தை அடைய அயராது உழைத்த இந்த மாணவிகளின் கனவும் நனவாகுமா என்று வெள்ளாளப்பட்டி கிராம மக்களே எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு வழிகாட்டியுள்ளது புதிய தலைமுறை கல்விக் கண்காட்சி கலங்கரை விளக்கம்.