தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன் தமிழகத்தின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் அனைத்தையும் சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 4 வது அட்டவணையில், ஒவ்வொரு மாநிலத்திற்குற்கும் கிடைக்கும் மொத்த உணவு தானியத்தின் அளவு குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், பொருளாதார ரீதியாக விலையை நிர்ணயிக்கும் உரிமை மத்திய அரசிடமே உள்ளதால், தமிழக அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.
பொதுவிநியோகத்திட்டத்திற்கான மாநில அரசின் ஒதுக்கீடு குறைக்கப்படாது என்ற உறுதியான உறுதிமொழியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் சட்டம் நடைமுறைக்கு வருவதிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
- -தேனி முருகேஸ்வரன்.