தகவல்தளம் இணையதளத்தில் உங்கள் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் Cell :9842945320 e-mail : kraja@thagavalthalam.com*****தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். Cell :9842945320 e-mail : kraja@thagavalthalam.com

மதுவின் பிடியில் பள்ளி மாணவர்கள்


     மதுவால் ஒருவனது அறிவும், பெருமையும், கெடுகிறது. அதுமட்டுமல்லாது அவனது உடல் நலமும், அவனை சார்ந்திருக்கும் குடியும் சீர்கெட மது காரணமாக இருக்கிறது. இத்தகைய மதுவின் தீமையைப் பற்றி, திருவள்ளுவர் திருக்குறளில், கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
   இன்றைய நிலையில், மனச்சோர்வுக்கு மருந்தாக மதுவை தான் முதலில் இளைஞர்கள் தேர்வு செய்கிறார்கள்..
    தேர்வில் தோல்வி, காதல் தோல்வி, சக மனிதர்களுடன் பிரச்னை, என்று எதற்கெடுத்தாலும் மதுவே தீர்வாக்கி கொள்கிறார்கள்.
    வெற்றியானாலும், விருந்து என்ற பெயரில் மதுவுக்கு முக்கிய இடம் கொடுக்கும் இளைஞர்களுக்கு, மது ஒன்றும் எட்டாகனியல்ல. ஊருக்கு நடுவே, பொதுக்கடைகளாக தான் மதுக்கடைகள் உள்ளன.
    தமிழகத்தில் 2003-04-ஆம் ஆண்டில் ரூ. 3,639 கோடியாக இருந்த மது விற்பனை பத்து ஆண்டுகளில் சுமார் 7 மடங்கு உயர்ந்து, 2012-13-ஆம் ஆண்டில் ரூ. 21,680 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது மது குடிப்போர் எண்ணிக்கையின் உயர்வை காட்டுகிறது.
    மதுவை ஒழிக்க சமூக ஆர்வலர்கள், காந்திய வாதிகள் , அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.
    மக்கள் உடல்நலத்தை கெடுக்கும் குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதைப் பாக்குகளை தமிழக அரசு அண்மையில் தடை செய்தது. பான்பராக், குட்கா போன்ற போதைப் பாக்குகள் வாய், தொண்டைப் புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கின்றன.
    பாக்குடன் பல்வேறு போதைப் பொருள்களையும் கலந்து விற்பதால், "உணவுப்பொருள் தரம் மற்றும் கேடு விளைவிக்காமை சட்டத்தின்' கீழ் இவற்றின் தயாரிப்பு, சேமிப்பு, விற்பனை ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
   இந்த நேரத்தில் ஏன் மதுவிலக்கை அமல்படுத்தக்கூடாது ? என்ற வினாவோடு, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
   சமூக ஆர்வலர் சசிப்பெருமாள், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் உள்ளிட்ட காந்தியவாதிகளும் மதுவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
சட்டக்கல்லூரி மாணவி உண்ணாவிரதம்:
மது இல்லா தமிழகம் காண விரும்பும் சட்ட மாணவர்கள் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ள நந்தினி என்ற மாணவி மது விலக்கு கோரி 29ந்தேதி காலை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

அன்று இரவே அவரை கைது செய்த காவல்துறையினர் பின்னர் விடுதலை செய்தனர்.
மதுரை சட்டக் கல்லூரியில் 4ம் ஆண்டு பயிலும் மாணவி நந்தினி, டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியதற்கு, அது அரசின் கொள்கை முடிவு என்று பதில் கிடைத்ததாக அவர் கூறினார்.
இந்த பதில் சட்டத்திற்கு புறம்பாக உள்ளதால், இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடக் கோரி சட்டக்கல்லூரி மாணவி நந்தினி காலவரையறையற்ற உண்ணாவிரதத்தில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்.
மாணவி நந்தினி நடத்தும் போராட்டத்திற்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்றமும், இந்திய மாதர் தேசிய சம்மேளனமும் ஆதரவு தெரிவித்துள்ளன. வருவாயை மட்டும் கணக்கில் கொள்ளாமல் மது கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன் வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விலக்கான மது விலக்கு :
சுசந்திரம் பெற்றபிறகு , தமிழ்நாட்டில் சுமார் 23 ஆண்டு காலம் அமலில் இருந்த மது விலக்கு 1971 ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டது.
1970 வரை தமிழ்நாட்டிலும், குஜராத் மாநிலத்திலும் மது விலக்கு அமலில் இருந்தன. புதிதாக மது விலக்கை அமல் படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
அப்போது, தமிழக அரசு மானியம் கோரிய போது, ஏற்கனவே மது விலக்கை அமலில் இருக்கும் மாநிலங்களுக்கு மானியம் கிடையாது என்று மத்திய அரசு கூறிவிட்டது.
இதனால் மது விலக்கை ரத்து செய்துவிட்டு, பிறகு மத்திய அரசு மானியம் கிடைக்கும்போது மீண்டும் அமலுக்குக் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்தது. 1971 ஆகஸ்டு 30-ந்தேதி முதல் மது விலக்கு தள்ளி வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
முதலில் தனியார் நடத்தி வந்த மதுக்கடைகளை தற்போது அரசே ஏற்று நடத்தி வருகிறது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமா?
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வரும் நேரத்தில், மது விரும்பிகளின் மனநிலை குறித்து அறிய முற்பட்டது புதிய தலைமுறை.
பூரண மதுவிலக்கு குறித்து மது அருந்தாதவர்கள் சொல்லி வரும் கருத்துக்களைக் காட்டிலும், மது பழக்கத்திற்கு ஆட்பட்டவர்களின் கருத்து ஆழமானது . குடிப்பழக்கம் அதிகமானதற்கு, அரசு நடத்தி வரும் டாஸ்மாக் கடைகளே காரணம் என கூறுகின்றனர் பல மது விரும்பிகள்.
மதுப்பழக்கத்திற்கு இளைஞர்கள் பெருமளவில் அடிமையாகி வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை குறைக்க வேண்டும் என்று, குடிப்பழக்கத்திற்கு அடிமையான சிலர் யோசனை தெரிவித்துள்ளனர். மதுபானம் அனைவருக்கும் எளிதில் கிடைத்து விடுவதால் தான் குடிப்பழக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.
முழுமையான மதுவிலக்கு கோரி, தற்போது அரங்கேறி வரும் விழிப்புணர்வு பேரணி, உண்ணாவிரதம் போன்றவை முன்பே நடைபெற்று இருந்தால், மதுவை அருந்தி இருக்க மாட்டோம் என்றும் சிலர் கூறுகின்றனர்.
அரசே மதுக்கடைகள் நடத்துவதில் தங்களுக்கு விருப்பமில்லை, மகிழ்ச்சிக்காக மது அருந்தவில்லை ஆனால் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டோம். மதுப் பழக்கத்தில் இருந்து மீண்டு வர விரும்புகிறோம். இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவதைப் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. மதுப் பழக்கத்தால் வருமானத்தின் பெரும்பாலான பகுதி கரைந்து விடுகிறது" என வருத்தம் தெரிவிக்கின்றனர் மதுவுக்கு அடிமையானவர்கள்.
மதுவின் பிடியில் பள்ளி மாணவர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள மீனவ கிராமம் காரங்காடு. சுமார் 3 ஆயிரம் பேர் வசிக்கும் இக்கிராமத்தில் அரசு மதுபானக் கடை கடந்த 2003ம் ஆண்டு திறக்கப்பட்டது. கடற்கரைக்கு அருகிலேயே மதுபானக்கடை உள்ளதால், மீன்பிடித்து வரும் மீனவர்கள் கரையில் அவற்றை விற்று நேராக மதுகுடிக்கச் சென்றுவிடுகின்றனர்.
அப்பாவி மீனவர்கள் மதுவுக்கு அடிமையாகி சிறு வயதில் மரணததைத் தழுவியதால் இளம் விதவைகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இவர்கள் மட்டுமின்றி, பள்ளி செல்லும் மாணவர்கள் கூட மது பழக்கத்திற்கு ஆளாகிவிட்டதாகக் கூறுகின்றனர் இப்பகுதி பெண்கள். இதன் காரணமாக, சிறுவயதிலேயே கல்வியை கைவிடும் அவலநிலையும் இங்கு அதிகரித்திருப்பதாக கூறுகிறார்கள்.
கேடாய் முடியும் மதுப்பழக்கத்திற்கு தீர்வு தான் என்ன...?
இவர்கள் குரலை கவனிக்குமா தமிழக அரசு  ? !
                                                                                      -தேனி முருகேஸ்ன்.