நாட்டிலேயே முதன் முறையாக, மதுரை தலைமை தபால் நிலையங்களில், ஆன்லைன் முறையில், பாஸ்போர்ட் விண்ணப்பப் பதிவு சேவை துவக்கப்பட்டது. மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், வடக்கு வெளி வீதி தலைமை தபால் அலுவலகத்தில் நடந்த விழாவில், தென் மண்டலத் தலைவர் சாருகேசி கூறுகையில்,"" இச்சேவை பாஸ்போர்ட் அலுவலகத்துடன் இணைந்து செயல்படுகிறது. அரசரடி, தல்லாகுளம், வடக்கு வெளி வீதி தலைமை தபால் நிலையங்களில், ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும். காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை, 50 ரூபாய் கட்டணத்தில், இச்சேவை கிடைக்கும், '' என்றார்.
பாஸ்போர்ட் மண்டல அதிகாரி மணீஸ்வரராஜா பேசியதாவது: மூத்த குடிமக்கள், 15 வயதுக்கு உட்பட்டவர்கள் இங்கு விண்ணப்பித்தால், முன்அனுமதி தேவையில்லை. பதிவு எண் (ஏ.ஆர்.என்.,) பெற்று, பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுகலாம். படிக்காதவர்கள் விண்ணப்பிக்க, தனியார் கம்ப்யூட்டர் மையங்களை நம்பி உள்ளனர். இதற்கு, 100 முதல் 1,000 ரூபாய் வரை, வாங்குவதாக புகார்கள் வருகின்றன.
தபால் அலுவலகங்களில், 50 ரூபாய் கட்டணத்தில் இச்சேவை பெறலாம். தென்மண்டல தபால் அலுவலகத்தின் சேவையும், எங்கள் மண்டல சேவையும், ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கியதால், விரைவில் அந்த மாவட்ட தபால் நிலையங்களுடன் இணைந்து செயல்படுவோம்.
பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்தில், கடந்த ஆண்டு, 2 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், வேலை தேடி வளைகுடா நாடுகளுக்குச் செல்வோர், குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டத்தினர் அதிகம். கடந்த 1989 க்குப்பின் பிறந்தவர்களுக்கு, வயதுச் சான்றிதழ் தனியாக தேவை என்பதால், போலிச் சான்றிதழை கொடுக்கின்றனர். கடந்த ஆண்டு, 150 சான்றிதழ்கள் "போலி' என, கண்டறியப்பட்டது. தொடர்ந்து, பத்திரிகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலம், தற்போது அவை குறைந்துள்ளன. சான்றிதழில் சந்தேகம் ஏற்பட்டால், ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் துறைகளின் இணையதளங்களைப் பார்த்து ஆய்வு செய்கிறோம்
இவ்வாறு கூறினார்.